சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டிராவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக்.17-ம் தேதி இப்படம் வெளியானது.
தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல்நாள் உலகம் முழுவதும் ரூ.22 கோடி வசூலித்தது. இதனைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் ‘டியூட்’ திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ.45 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வெளியான ஆறு நாட்களில் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. ஹீரோவாக அறிமுகமான முதல் மூன்று படங்களும் ரூ.100 கோடிக்கு வசூல் செய்வது இந்திய அளவில் இதுவே முதல் முறை என்று சினிமா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜென் ஸீ தலைமுறையினரை கவரும் வகையில் தொடர்ந்து படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.