ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு மற்றும் புஷ்பா திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் தில்ராஜுவுக்கு பைனான்ஸ் செய்யும் மேங்கோ மீடியா நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 55 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினர். கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த சோதனை 5-வது நாளாக நேற்று காலை வரை நீடித்தது.
இவர்களுக்கு திரைப்படம் எடுக்க பணம் எப்படி வந்தது? சமீபத்திய திரைப்படங்களில் உண்மையான வசூல் என்ன என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன. மேலும் தில்ராஜுக்கு சொந்தமான வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. வங்கி லாக்கர்களும் சோதனையிடப்பட்டது. இது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சோதனையில் பல ஆவணங்களும், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களும் ரூ.26 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு ஹைதராபாத்தில் தில்ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் வெறும் 20 லட்சத்திற்கு மட்டுமே கணக்கு காட்ட வேண்டி இருந்தது. நான் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த தொழிலிலும் முதலீடு செய்யவில்லை. என்னுடைய கணக்கு வழக்குகளை பார்த்து மிகவும் ‘கிளீன்’ ஆக உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளே பாராட்டினர். ஆனால் ஊடகங்களில் பல ஆவணங்கள், ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இது தவறான தகவலாகும்” என்றார்.