சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மே 1-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் டீஸர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இதன் தெலுங்கு வெளியீட்டு உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. எம்.ஜி முறையில் ரூ.10 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை சித்தாரா நிறுவனம் உறுதி செய்யவில்லை.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்வில் கலந்துக் கொள்ளவுள்ளார் சூர்யா.
‘ரெட்ரோ’ பணிகளை முடித்துவிட்டு, ஆர்.ஜே.பாலாஜி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சித்தாரா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.