விக்ரம் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’வீர தீர சூரன்’ படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்கள். தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதை முடிவு செய்துவிட்டார் விக்ரம்.
இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விக்ரமுக்கு நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கு இசையமைப்பாளராக ‘3 பி.ஹெச்.கே’ படத்துக்கு இசையமைத்த அம்ரித் ராம்நாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் இருக்கும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

