விருச்சிகம்: எவ்வித பேதமும் இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவிக்கும் நீங்கள், பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். ராஜதந்திரத்துடன் செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்து தீர்வு காண்பீர்கள். இனம் காண இயலாதபடி இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரபல யோகாதிபதி எட்டில் சென்றும் மறைவதால், எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏலச்சீட்டு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
திடீர் பயணங்கள் இருக்கும். அதேபோல், வீண் பழிகள், அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பதிகள் பிரச்சினைக்குள் மூன்றாம் நபர் தலை யீட்டை அனுமதிக்க வேண்டாம். பழைய பகையை நினைத்துக் கொண்டு உறவினர்களிடம் பேசாமல் இருக்க வேண்டாம். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குல தெய்வம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது நன்மை தரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதே அளவு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிநாதனும், ஆறாம் இடத்துக்கு அதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையும். ஆனால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவிக்காமல் பொறுமையாக இருப்பது நல்லது. மன இறுக்கம், தூக்கமின்மை விலகும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீட்டில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்து போகும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்களுடைய தன, பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை குரு பகவான் பயணிப்பதால் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைக் கும். அவர்களின் திருமணமும் சிறப்பாக நடக்கும். புகழ், கௌரவம் உயரும். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் எதிலும் வெற்றியுண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பிரபலங்களின் நட்பு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.
வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்தி விடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும்.
உத்தியோகத்தில், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமா வீர்கள். எனினும் அவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கணினித்துறையினருக்கு சலுகைகள் கிடைக்கும். கலைஞர்கள் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி நிதானத்துடன் இலக்கை எட்ட வைப்பதாக அமையும்.
பரிகாரம்: உத்திரமேரூர் – காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருப்புலிவனத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தி, வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை அமிர்தகுசலாம்பாளை வியாழக்கிழமைகளில் வணங்குங்கள். காது கேளாதோருக்கு உதவுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |