வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் இயக்கத்தில் உருவாகும் ‘டயங்கரம்’ குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. ஏனென்றால் இப்படத்தின் திரைக்கதையினை முடிவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் வி.ஜே.சித்து.
நேற்று சென்னையில் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வி.ஜே.சித்து இயக்கி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக சித்து குமார், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்தி காமெடி, எமோசன் உள்ளிட்டவை கலந்த கதையாக இதனை உருவாக்கி இருக்கிறார் வி.ஜே.சித்து. இதன் தொடக்கவிழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

