ஷேன் நிகாம், சாக் ஷி வைத்யா நடித்துள்ள மலையாளப் படம், ‘ஹால்’. இதை அறிமுக இயக்குநர் வீரா இயக்கியுள்ளார். இஸ்லாமிய இளைஞனுக்கும் கிறிஸ்தவ பெண்ணுக்குமான காதலைச் சொல்லும் படம் இது. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளில் செப்.12-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தில் இடம்பெறும் மட்டிறைச்சி பிரியாணி காட்சி மற்றும் 15 வசனக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை வாரியம் கூறியது. படக்குழு மறுப்பு தெரிவித்ததால் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, ‘ஹால்’ படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதோடு, ‘ஹால்’ திரைப்படத்தை நீதிமன்றமோ அல்லது அவர்கள் நியமிக்கும் பிரதிநிதியோ பார்க்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தப் படத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் இருப்பதாகக் கூறி கேரள மாநிலம் கத்தோலிக்க காங்கிரஸின் தாமரைசேரி மறைமாவட்டத் தலைவர் கே சாக்கோ, மனு தாக்கல் ஒன்றை செய்தார். அதில், சமூக மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக இப்படத்தின் காட்சிகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
அத்தகைய காட்சிகள் அனுமதிக்கப்பட்டு, படம் வெளியானால் அது கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி.அருண், படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தயாரிப்பாளரின் கோரிக்கையை அக்.21-ல் நீதிமன்றம் பரிசீலிக்கும் என்று கூறியிருந்தார்.
அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது, அக்.25-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 7மணியளவில் காக்கநாட்டில் உள்ள திரையரங்கில் படத்தைப் பார்க்க இருப்பதாக நீதிபதி கூறினார். அப்போது, தணிக்கை வாரிய அதிகாரிகள், கத்தோலிக்க காங்கிரஸின் தாமரைசேரி மறைமாவட்டத் தலைவர் கே சாக்கோ ஆகியோரும் உடனிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.