தனது தொடர் வெற்றிகளுக்கு பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிருது ஹாருண், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ள ‘டியூட்’ படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக் கர்ஸ் தயாரித்த இப்படம் அக்.17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன்பு நடித்த ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களும் ரூ.100 கோடி தாண்டி வசூலித்தன. இந்த நிலையில், தனது தொடர் வெற்றிகளுக்கு பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “என்னுடைய முதல் மூன்று படங்களுக்கு ஹாட்ரிக் ரூ.100 கோடிகள். இதற்கு என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆனால் இதற்கு காரணம் நான் அல்ல. நீங்கள்தான். நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, என்னை உங்கள் வீட்டில் ஒருவனாக பார்த்த உங்களுக்கு நன்றியை தவிர என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிக்க நன்றி. இந்த சமயத்தில், எனக்கு வாய்ப்பளித்த ஜெயம் ரவி, ஐசரி கணேஷ், அர்ச்சனா கல்பாத்தி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்னுடைய இயக்குநர்கள் அஸ்வந்த் மாரிமுத்து, கீர்த்தீஸ்வரன் ஆகியோருக்கு நன்றி. இதைத்தாண்டி தெலுங்கு, கேரளா, கர்நாடகா ஆடியன்ஸுக்கும் நன்றி” என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

