ஹாலிவுட்டில், இங்ரிட் பெர்க்மேன், யூல் பிரைன்னர், ஹெலன் ஹையஸ் நடித்து 1956-ல் வெளியான படம், ‘அனஸ்டேசியா’. இந்தப் படத்தின் தாக்கத்தில் இந்தியில், தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் ‘ராஜா ஜானி’ என்ற படத்தை உருவாக்கினார்கள். மோகன் சேஹல் இயக்கத்தில் 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தின், தமிழ் ரீமேக்தான், ‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
சோமநாதபுரம் ஜமீனையும் அவருடைய மனைவியையும் ஒரு கும்பல் கொன்று விடுகிறது. அவர்களின் 6 வயது மகள் ராதா, ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறாள். ராதாவின் பாட்டியான ஜமீனின் ராணி ராஜலட்சுமி, தனது பேத்தி எங்கோ உயிரோடு இருப்பதாக நம்புகிறார். அதற்கு, ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட பேத்தி, அவருடைய 18 வயதில் திரும்புவாள் என்று ஜோதிடர் சொன்னது காரணமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் பேத்தி திரும்பாவிட்டால், ஜமீன் சொத்துகளையும், ரகசிய பொக்கிஷங் களையும் அறக்கட்டளைக்கு எழுதி வைக்க முடிவு செய்கிறார், பாட்டி. ஜமீனை கவனித்து வரும் திவானுக்கு இதைக் கேட்டதும் அதிர்ச்சி. சொத்துகளை அடைய நினைக்கும் அவர், காணாமல் போன பேத்தியை போல ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடிக்க, கண்ணனிடம் கூறுகிறார். அவரும் வள்ளி என்ற நாடோடி பெண்ணை, மாடர்னாக மாற்றி, இவர்தான் பேத்தி என்று கொண்டு வருகிறார், ஜமீனுக்கு. பாட்டியும் நம்பி ஏற்றுக்கொள்கிறார். இதற்கிடையே கண்ணன் மீது காதல் வருகிறது வள்ளிக்கு. பணத்தைப் பெரிதாக நினைக்கும் கண்ணன் முதலில் வெறுக்கிறான். பிறகு அவனுக்கும் வள்ளி மீது காதல் ஏற்பட்ட பின் என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.
யூகிக்கக் கூடிய கதைதான். ரஜினி காந்த் கண்ணனாகவும் தேவி, வள்ளி மற்றும் ராதாவாகவும் ரத்னகுமாராக ஜெய்சங்கரும் திவானாக செந்தாமரை யும் அவருடைய மகனாக ரவீந்திரனும், ராணி ராஜலட்சுமியாக எஸ்.வரலட்சுமியும் நடித்தனர். சோ, சில்க் ஸ்மிதா, என பலர் உண்டு.
அந்த காலத்து ‘கமர்சியல் ஹிட் காம்போ’வான பஞ்சு அருணாச்சலம் திரைக் கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினி நடிப்பில் 25 படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
துவாரகீஷ் சித்ரா நிறுவனம் சார்பில் துவாரகீஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்தார். பிரம்மாண்டம் என்றால் ‘செட்’களுக்குத் தண்ணீராகச் செலவழித்தார் பணத்தை. அந்த ‘ரிச்னஸ்’ படத்தில் தெரிந்தது. இளையராஜா இசை அமைத்தார். அவர் இசையில், ‘பேசக் கூடாது…’, ‘ஆசை நூறு வகை’ ஆகிய பாடல்கள் ஹிட்டாயின.
இந்தப் படத்தில் ரஜினி, ஸ்ரீதேவியின் ஸ்டைலான காஷ்ட்யூம்கள் பேசப்பட்டன. அமைக்கப்பட்டிருந்த ‘செட்’களையும் பாபுவின் ஒளிப்பதிவையும் அப்போது பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருந்தன. 1983-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பேசப்பட்டது.