சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம்.
மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது.
மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை.
‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது.
லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார்.
முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது.
’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை?
அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.
மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம்.