‘சரவணா’ படத்தின் போஸ்டர், பொதுத் தேர்வின் வினாத் தாள்களில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் கேள்வி, பாதி கட்டுமானத்தில் இருக்கும் வீடுகளின் ஒழுங்கற்ற தன்மை என வினோத் ராஜ்குமாரின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.
வீடு என்பது செங்கற்களும், சிமெண்டும் மட்டுமல்ல, அதில் வாழும் மனிதர்களின் பந்தமும், அன்பும்தான் என்பதை ஒரு மிடில் கிளாஸ் கனவோடு கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
இரண்டு தசாப்த பயணமாக குடும்பத்தின் தியாகங்கள், உறவுகளின் வலிமை, மனித மனங்களின் உறுதி ஆகியவற்றை வைத்து ‘இது வெறும் வீடு வாங்கும் கதையல்ல’ என்ற யதார்த்தத்தைப் பேசியிருக்கிறது திரைமொழி.
கல்விக் கட்டணம், மருத்துவச் செலவு, திருமணம் போன்ற சூழல்கள் ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் கதையையும் பிரதிபலிப்பதால், ஒவ்வொருவரும் தங்களை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடிகிறது.
‘நீங்க டிராவிட் ஃபேன், நான் தோனி ஃபேன்’ என்ற குட்டி வசனத்தில் பெரிய அர்த்தத்தையும், ‘அடிச்சாதான் வன்முறையா’ என்று பெண்களுக்கு எதிராக நடக்கும் குடும்ப வன்முறையைச் சாடிய இடத்திலும் வசனங்கள் கவர்கின்றன.
பெரும்பாலும் ஆண் மையப் பார்வையில் கதை சென்றாலும், ஆர்த்தி உடைக்கும் கண்ணாடி பாட்டில் அந்த எண்ணத்தையும் சேர்த்தே உடைக்கிறது. படம் முழுக்க யதார்த்தமாக நகரும் காட்சிகள், இறுதியில் மீண்டும் படித்து ‘மெக்கானிக்கல் இன்ஜினியர்’ ஆகிறார் என்ற காட்சி ‘ஆசை நிறைவேற்ற’மாக இருந்தாலும் லாஜிக் மீறலே!
அதேபோல, சொந்த வீடே மரியாதை என்ற போதனையையும் தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் தேர்ந்த நடிப்பு, தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்த ஆக்கம், யதார்த்தமான திரைக்கதை என நம்மைச் சிறப்பாக வரவேற்கும் இந்த ‘வாசுதேவன் & ஃபேமிலி’யின் இல்லத்திற்கு நிச்சயம் திரை விருந்துக்குச் செல்லலாம்.