8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என கூறியது சர்ச்சையானதற்கு தீபிகா படுகோன் காட்டமாக பதிலடிக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின.
தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக முதன்முறையாக தீபிகா படுகோன் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.
“இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள். அதெல்லாம் தலைப்பு செய்தியாகவில்லை. ஆனால், நான் சொன்னால் மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை.
சில ஆண் நடிகர்கள் வார நாட்களில் மட்டுமே நடிப்பார்கள், வார இறுதி நாட்களில் படப்பிடிப்புக்கு வரமாட்டார்கள். இந்திய திரையுலகில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இது ஒழுங்கற்ற திரையுலகமாகும். இதனை கட்டமைக்க வேண்டும். சமீபத்தில் குழந்தைப் பெற்ற சில நடிகைகள் கூட 8 மணி நேரம் தான் பணிபுரிகிறார்கள். அதுவுமே தலைப்பு செய்தியாகவில்லை” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். எப்போதும் அமைதியாக என் போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். சில நேரங்களில் அந்தப் போராட்டங்கள் பகிரங்கமாகிவிடும், நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இல்லை. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியமாகவும் எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் தீபிகா படுகோன்.