ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். சென்னையில் ‘கூலி’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு. இதில் ரஜினியுடன் நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே.
‘ஜெயிலர்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி, சில காட்சிகளில் நடித்திருந்தார் தமன்னா. அவர் நடனமாடிய ‘கவாலா’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
மார்ச் மாதத்துடன் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என்ற மும்முரத்தில் பணிபுரிந்து வருகிறது படக்குழு. ஆனால், அதற்குள் ரஜினி காட்சிகள் வேண்டுமானால் முடிவடையும், இதர காட்சிகள் முடிக்க ஏப்ரல் மாதமாகிவிடும் என்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.