தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் வெளியீடு தாமதமாகிறது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் ‘இட்லி கடை’. இதன் படப்பிடிப்பு மதுரை, தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வரும் இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ‘குட் பேட் அக்லி’ டீஸர் வெளியான பின்பு, ‘இட்லி கடை’ வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருக்கிறது ‘இட்லி கடை’. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு முடிவடையாதது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘குபேரா’ படம் தான் ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு பிறகு தான் ‘இட்லி கடை’ வெளியாகும் எனத் தெரிகிறது. தனுஷ் இயக்கி வரும் இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.