டெல்லியிலுள்ள சர்வதேசப் பள்ளியில் படிக்கும் பணக்கார வீட்டுப்பெண் பியா ஜெய்சிங்குக்கு (குஷி கபூர்). பெற்றோரைவிட, சிறுவயதிலிருந்தே சகோதரிகளைப்போல ஒன்றாகப் பழகிய தோழிகள்தான் உயிர்; உலகமாக இருக்கிறார்கள்.
சந்தர்ப்ப சூழல்களால் இவர்களது நட்பில் விரிசல் விழுகிறது. பழையபடி தோழிகளின் நம்பிக்கையைப் பெற, தனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருப்பதாகப் பொய் சொல்லும் பியா அதே பள்ளியில் படிக்கும் மாணவர் அர்ஜுன் மேத்தாவை (இப்ராகிம் அலிகான்) பணம் கொடுத்து காதலனாக நடிக்கச் சொல்கிறார். அந்த பொய் நீடித்ததா? தோழிகளின் நம்பிக்கையைப் பெற்றாரா? என்பதுதான் சைஃப் அலிகான் மகன் இப்ராகிம் அலிகான் நடிகராக அறிமுகமாகியுள்ள இந்த நெட்ஃப்ளிக்ஸ் படத்தின் கதை.
பெற்றோருக்கு செலவு வைக்காமல், படித்துக்கொண்டிருக்கும்போதே திட்டமிட்டு கடின முயற்சிகளை மேற்கொள்வது, எதிர்காலத் திட்டத்தை வகுப்பது, பொய்யான பாய் ஃப்ரெண்டாகத் தவியாய் தவிப்பது என ஓப்பனிங் காட்சியில் ஆரம்பித்து, பல காட்சிகளில் ரொம்ப க்யூட்டாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், நாயகன் இப்ராகிம் அலிகான். நடிகர் சைஃப் அலிகான் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் டீனேஜ் பருவத்திற்குரிய நடிப்பை கண்முன் நிறுத்தி தனித்துத் தெரிகிறார்.
பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் பெற்றோரின் அன்பு கிடைக்காமல் ஏங்குவது, திறமை இருந்தும் பெண் என்பதால் குடுபத்தாராலேயே புறக்கணிக்கப்படும்போது ஏற்படும் வலி, வாடகை பாய் ஃப்ரெண்டாக இருந்தாலும் வழக்கம்போல் உணர்வுகளை வெளிப்படுத்தி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது என குஷி கபூர் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம். இப்ராகிம் அலிகான், குஷி கபூரின் பெற்றோராக வரும் சுனில் ஷெட்டி – மஹிமா செளத்ரி, தியா மிஸ்ரா – ஜூகல் ஹன்ஸ்ராஜ் போன்றோரின் நடிப்பும் நம் மனதைக் கவரவில்லை.
தோழிகளுக்குள் ஏற்படும் சிறு தவறான புரிதல், அதற்காக இப்ராகிம் அலிகானை குஷி கபூர் பொய்யாக நடிக்கச் சொல்வது, இப்ராகிம் அலிகான் மீது குஷி கபூருக்கு காதல் வருவது என எந்தக் காட்சியுமே உணர்வுப்பூர்வமாக இல்லாததால் மனதோடு ஒன்ற மறுக்கின்றன. குறிப்பாக, குஷி கபூர் திடீரென சிறு குழந்தையைப்போல் துள்ளிக்குதித்து அப்பாவியான கேரக்டராக உலவுகிறார். திடீரென மெச்சூரிட்டியான பெண்ணாக சீரியஸாகப் பேசுகிறார். இப்படி, நிலையற்ற கதாபாத்திரமாக மாறி மாறி குழப்புகிறார். இப்ராகிம் அலிகான் – குஷி கபூருக்கான லவ் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ரசிக்கும்படி இல்லை.
சச்சின் ஜிகார் – துஷார் லாலின் இசையும் அனுஜ் சம்தானியின் ஒளிப்பதிவும்தான் திரைக்கதையை கலர்ஃபுல்லாக பயணிக்கவைக்கின்றன. அவ்வளவுதான். படத்தின் ப்ளஸ் என்றால் என்ன சொல்வதென்றே யோசிக்கவேண்டியிருக்கிறது. படத்தின் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார், என்பதைத் தெளிவாகச் சொல்லாமல் பார்வையாளர்களைக் குழப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது காட்சிகள். அதுவும், காட்சிகளைக்கூட எண்ணிவிடலாம். ஆனால், பாடல்களை எண்ண முடியாது என்கிற அளவுக்குப் பாடல்களுக்கு நடு நடுவேதான் காட்சிகள் வந்துபோகின்றன. கரண் ஜோகர் தயாரிப்பு, சைஃப் அலிகான் மகன் சினிமா என்ட்ரி, ஶ்ரீதேவி மகள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் பழைமையான கதை, தடுமாற்றமான திரைக்கதை, பிற்போக்குத்தனமாக காட்சிகள் என ஏமாற்றத்தையே அளித்துள்ளார் அறிமுக இயக்குநர் ஷெளனா கெளதம்.
அதேபோல், பெண் குழந்தை வேண்டும் என்கிற அளவுக்கு இப்போது சமூகம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஆனால், இன்னும் மாடர்ன் பெற்றோர், ஆண் குழந்தைதான் வேண்டும் என சண்டை போட்டுக்கொள்வதாக காட்சிப்படுத்தியிருப்பது பழமைவாதத்தின் உச்சம். அந்த சிந்தனையிலிருந்து அந்தக் குடும்பம் மாறியதா என்பதையும் தெளிவுபடுத்தப்படவில்லை. பெண்ணாக பிறந்துவிட்டதால் குஷி கபூர் ஒதுக்கப்படுவதாக காட்டப்படும் சூழலில் தாத்தா, அப்பாவுக்கு நிகராக வழக்கறிஞருக்கு படித்து அத்தொழிலில் சாதித்தாள் என்றாவது காட்டியிருக்கவேண்டுமல்லவா? அப்படியும் காண்பிக்கப்படவில்லை. இப்படி, எதிலுமே ஒரு தெளிவற்ற நிலையில் நகர்கிறது, திரைக்கதை.
படத்தில் காதலனை வாடகைக்கு எடுப்பதுபோல் பார்வையாளர்களையும் வாடகைக்குத்தான் எடுக்கவேண்டும் போல. அந்தளவுக்கு படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை எந்த புதுமையான காட்சிகளும் இல்லை. கதையும் பழசு, காட்சிகளும் பழசு என திரைக்கதையிலும் புதுமை இல்லை. க்ளைமாக்ஸும் அனைவருக்கும் தெரிந்ததுதான். கதாப்பாத்திரங்களும் எந்தவித உணர்வுகளையும் நமக்குள் கடத்தவில்லை. அதிக நேரம் இருக்கிறது, என்ன செய்வதென்றே தெரியவில்லை என யோசித்துக்கொண்டிருப்பவர்கள், வேறு வழியில்லாமல் இந்த படத்தைப் பார்க்கலாம். அதற்குப்பிறகு, உங்கள் ரசனைக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.