கீர்த்தி திறமையான நடிகை. யாரைப் பார்த்தும் ஃபாலோ பண்ணனும்னு நினைக்க மாட்டாங்க. தமிழ்ல முதன்முதலா ‘ரஜினி முருகன்’ படத்துலதான் சொந்தக் குரல்ல டப்பிங் பேசினாங்க. ‘நல்லா தமிழ் பேசுறீங்களே… சொந்தக் குரல்லயே பேசலாமே? தேசிய விருதெல்லாம் சொந்தக் குரல்ல பேசினாதான் கிடைக்கும்’னு என்கரேஜ் பண்ணேன். ‘ரஜினி முருகன்’ படத்துக்கு சொந்தக் குரல்லயே டப்பிங் பண்ணி பிரமாதப்படுத்திட்டாங்க. அதுலருந்துதான், மற்ற மொழிகளிலும் சொந்தக் குரலையே பயன்படுத்தினாங்க. ‘மகா நடிகை’ படத்துக்காக தேசிய விருதும் கிடைச்சது. ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகை. அவங்களை இப்படி குறைச்சு மதிப்பிட்டுடக்கூடாது” என்பவரிடம் “சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராகிவிட்டார்… சூரி ஹீரோவாகிவிட்டாரே.. எப்படி இருக்கு?” என்றோம்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘ரஜினி முருகன்’ கதையை நிறைய ஹீரோக்கள்கிட்டே சொன்னேன். காதுகொடுத்துக் கேக்கவே இல்ல. ஆனா, சிவகார்த்திகேயன் சார்தான் நம்பிக்கையோட பண்ணினார். அவரோட நம்பிக்கை வெற்றியையும் கொடுத்துச்சு. அதனால்தான், அவர் சினிமாவுல மாஸ் ஹீரோவா வரணும்னு ‘சீமராஜா’ கதையை ரெடி பண்ணேன். அதுல, சில தடுமாற்றங்கள் வந்தாலும் இன்னைக்கு அவரோட வளர்ச்சி ‘அமரன்’ல வந்து நிற்குது. அவரோட நல்ல மனசுக்கும் கடுமையான உழைப்புக்கும் இன்னும் பெரிய வெற்றிகளைக் குவிப்பார்.

சூரி, நான் ஆச்சர்யப்படுற அன்பு அண்ணன். கடுமையான உழைப்பாளி. அவரோட உழைப்பு எப்படின்னு ‘விடுதலை’ படத்துலேயே பார்த்திருப்பீங்க. ‘சீமராஜா படத்துக்காக நீங்க சிக்ஸ்பேக் வைக்கலாமே பிரதர்’னு கேட்டேன். வெச்சுட்டா போச்சுன்னு சொல்லி, அடுத்தநாளே முயற்சில இறங்கிட்டார். சிக்ஸ் பேக்ல ஆரம்பிச்சது அவரோட வாழ்க்கை. அதுக்கப்புறம் வெற்றிமாறன் சார் கண்ணுல பட்டு ‘விடுதலை’, ‘கருடன்’ன்னு தொடர்ந்து ஹீரோவா பண்ணிட்டிருக்கார். அவரோட வெற்றிக்குக் காரணம் உழைப்புதான்.