மீனம்: தோல்வி தீயில் சாம்பலாகாமல் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழும் வல்லமை கொண்ட நீங்கள், சுயநலமின்றி பொது நலத்துடன் வாழ்பவர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். கவலை வேண்டாம். நல்லதையே செய்வார்.
ஆட்சிப் பெற்று சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். இனி நிம்மதி பிறக்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில், ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடி-க்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.
வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானப் பிரச்சினை ஆகியன ஏற்படும். எனவே, எண்ணெய்யில் வறுத்த, பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் பருகுங்கள். காய்கறி, பழ வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தள்ளிப் போய் கொண்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். விஐபிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டை பார்ப்பதால் விஐபிகள் அறிமுகமாவார்கள். கவுரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்க ளின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால்வலி கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை செல்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். வீடு மாறுவீர்கள்.
28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் லாப – விரயாதிபதியுமான சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், அதேபோல் செலவும் கலந்து வரும். அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங் களில் முதலீடுகள் செய்ய வேண்டாம். திடீர் பயணங்களும் அலைச்சலும் இருக்கும். தூக்கம் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் சுக – சப்தமாதி பதியான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் வீடு மாறுவீர்கள். தாயா, தாரமா என தடுமாற்றம் வரும். வீண்பழி வரும். நட்பு வட்டத்தில் விரிசல் வரும். ஆனால் வெளிவட்டாரம் அருமையாக இருக்கும்.
இல்லத்தரசிகளே! அடுப்படி அலமாரிகளில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி பணிச்சுமை குறையும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவிசாயுங்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.
வியாபாரிகளே, தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீட்டை போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இனி கணிசமாக லாபம் உயரும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போவது நன்மை அளிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உத்தியோகஸ்தர்களே, வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். கணினி துறையினரே! கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.
இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளை தரும்.
பரிகாரம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |