கெட்அப்கள் மாற்றாமல் நடித்தாலும் கூட படத்திற்கு படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஹீரோ சசிகுமார்.
சமீபத்திய “அயோத்தி’, ‘நந்தன்’ என பல படங்களை உதாரணாமாக கூற முடியும். அடுத்தடுத்து வெளிவரகூடிய கதைகளும் அதே கவனத்துடன் நடித்து வருகிறார்.
சிம்ரனுடன் சசிகுமார் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை அடுத்து இயக்குநர்கள் சசி, ராஜூமுருகன், தரணி ராசேந்திரன் , ‘சலீம்’ நிர்மல் குமார், பாலா அரண் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் ராஜூமுருகன், ”சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில் மிக முக்கியமான படங்களில் நடித்து வருகிறார்” என்று மனம் திறந்திருக்கிறார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை தொடர்நது ராஜுமுருகனின் ‘மை லார்ட்’ வெளிவருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகுமாரின் ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர். ‘மை லார்ட்’ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.