“ரெட்ரோ’வுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். சூர்யா, த்ரிஷா ஜோடி இதற்கு முன் ‘மௌனம் பேசியதே’, ‘ஆறு’, ‘மன்மத அன்பு’வில் ஒரு பாடல்… பின்னர் இப்போது ‘சூர்யா 45’ல் இணைந்துள்ளனர்.
இதில் யோகிபாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாசிகா. ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாளத்தில் ‘ஹோம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இந்திரன்ஸ் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கோவையைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான திருவிழா செட் அமைக்கப்பட்டு, சூர்யா – த்ரிஷா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிரசாத் லேப்பிலும் அரங்கம் அமைத்து சூர்யா, த்ரிஷா காம்பினேஷனில் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.