அப்பா – மகன் பாசக்கதையை நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள், காதல் காட்சிகள் என வைத்து ஜனரஞ்சக சினிமாவாகக் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், பெரும்பாலான காட்சிகள் பார்த்துச் சலித்த டெம்ப்ளேட்களாகவும், சோதிக்கும் வகையறாக்களாகவும் இருப்பது ஏமாற்றமே! வெள்ளந்தி கிராம மனிதர்களை ஏமாற்றும் வில்லன் கேங், அதைத் தொடர்ந்து வரும் இறுதி ட்விஸ்ட் ஓகே ரகம் என்றாலும் யாருமே இந்த எளிய மோசடி குறித்து யோசிக்காமல் இருப்பது என்ன லாஜிக்கோ! உண்மை என்ன என்பதை ஆரம்பத்திலேயே நெருங்கிவிட்ட பிரபுவும் அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை அதைக் கண்டுகொள்ளாமல் போனது ஏன் என்பதும் புரியாத புதிரே! என்னதான் 90களின் தொடக்கத்தில் நடக்கும் கதை என்றாலும் பாத்திர வார்ப்புகளில் இவ்வளவு அப்பாவித்தனம் ஆகாது சாரே!

லாஜிக் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால்கூட, கள்ளுக்கடை கவர்ச்சிப் பாடல், வழக்கொழிந்துபோன காதல் காட்சிகள், அபத்தமான உருவக்கேலி காமெடிகள் எனச் சுவாரஸ்யமற்ற தொகுப்பாகவே நகர்கிறது படம்.
பாசக்கதையில் அதீத செயற்கைத்தனமும், புதிதாக எதுவுமில்லாத எழுத்தும் ஏமாற்றம் தருவதால் ஒரு முழுமையான திரை அனுபவமாக மாறவே தடுமாறுகிறான் இந்த ‘ராஜபுத்திரன்’.