பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், இதனால் விவாகரத்து செய்யப்போவதாகவும் அடிக்கடி செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. அதனை நிரூபிக்கும் விதமாக இருவரும் அடிக்கடி பொதுநிகழ்ச்சிகளில் தனித்தனியாக வந்து கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால் விவாகரத்து குறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வந்தனர். சமீப காலமாக மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதற்கு விளக்கம் அளித்து அபிஷேக் பச்சன் பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”சமூக வலைத்தளத்தில் வரும் தவறான தகவல்கள் என்னை மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தையே பாதிக்கிறது. ஒரு காலத்தில் இது போன்ற செய்திகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தேன். ஆனால் இப்போது குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டியிருக்கிறது.
முன்பு என்னைப் பற்றி வந்த தகவல்கள் என்னைப் பாதிக்கவில்லை. இன்று எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இதனால் அது போன்ற செய்திகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எங்களை பற்றி தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் உண்மையை விரும்பாததால் எனது விளக்கம் உதவாது என்று நம்புகிறேன். எதையாவது நான் தெளிவுபடுத்தினாலும் அதனையும் அவர்கள் திசை திருப்பிவிட்டுவிடுவார்கள். ஏனென்றால் எதிர்மறையாகச் செய்திகள் அதிகமாக விற்பனையாகின்றன.
நீங்கள் நான் அல்ல. எனது வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது. எனவே நான் பதிலளிக்கவேண்டியவர்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை. பொய்யைப் பரப்புபவர்கள் தங்களது மனச்சாட்சிப்படி நடந்து கொள்ளவேண்டும்.
இந்த இடத்தில் சூழ்ச்சி என்னவென்று எனக்குத் தெரியும். இதில் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளப் பக்கத்தில் தன்னைப் புண்படுத்தி மோசமாக ட்ரோல் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த அபிஷேக் பச்சன், அந்த பதிவைப் பார்த்து கோபம் அடைந்த எனது நண்பர் சிக்கந்தர் கெர், தனது முகவரியைக் குறிப்பிட்டு ட்ரோல் செய்பவர்கள் நேருக்கு நேர் சொல்லவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அது குறித்து, “ஒரு கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னால் பெயர் குறிப்பிடாமல் உட்கார்ந்து கொண்டு மிகவும் மோசமான விஷயங்களை எழுதுவது மிகவும் எளிது. நீங்கள் ஒருவரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
அவர்கள் எவ்வளவு கடிமனான தோலைக் கொண்டிருந்தாலும், அது அவர்களைப் பாதிக்கிறது. யாராவது உங்களை அப்படிச் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆன்லைனில் இது போன்ற செய்தியைப் பரப்புபவர்கள் துணிச்சல் இருந்தால் நேரில் வரவேண்டும். நீங்கள் சொல்லப்போகும் செய்தியை இணையத்தில் சொல்லப்போகிறீர்கள் என்றால் நேரில் வந்து எனது முகத்துக்கு நேராகச் சொல்லுங்கள்.

அந்த நபருக்கு இதை என் முகத்திற்கு நேராக வந்து சொல்ல ஒருபோதும் தைரியம் இருக்காது என்பது தெளிவாகிறது. யாராவது வந்து என் முகத்திற்கு நேராக வந்து விஷயங்களைச் சொன்னால், அவர்கள் அவர்களது கருத்தில் உறுதியோடு இருப்பதாக நான் உணருவேன். நான் அதை மதிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
அபிஷேக் பச்சன் நடித்த காலிதார் லாபதா படம் வரும் 4ம் தேதி ஜீ5ல் ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. அதோடு நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் கிங் படத்திலும் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கான் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஷாருக்கான் இப்படத்தில் நடிக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR