ஷிவதா, ரம்யா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘கயிலன்’. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளனர். பிடிகே பிலிம்ஸ் சார்பில் பி.டி. அரசகுமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கியுள்ளார். ஜூலை 25-ல் வெளியாகும் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கே.பாக்யராஜ், கவுரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே. ராஜன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அருள் அஜித் பேசும்போது, “ ‘கயிலன்’ என்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். இந்தச் சொல் இந்த கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் முடிவில் அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்துள்ளோம். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர், ‘கதையில் வாய்ப்பு கிடைத்தால் நல்ல மெசேஜை சொல்லுங்கள்’ என்றார். அதன்படி இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
த்ரில்லர் படங்களில் ஆணாதிக்கம்தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் முதன்மையான கதாபாத்திரங்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக முதலில் தேர்வு செய்தது ஷிவதாவைதான். அவர் நடிப்பில் வெளியான ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’, போன்ற படங்களில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது” என்றார்.