நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு கதைப் பிடித்திருந்தால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? புரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை
இதில், நடிகை தபுவுடன் முதன்முறையாக நடிக்கிறேன். அவருக்கு முக்கியமான வேடம். திறமையான ஒரு நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது.
நான் நடித்த ‘மகாராஜா’ படத்தின் வெற்றி பற்றி கேட்கிறீர்கள். இதுவரை நடித்ததிலேயே இந்தப் படத்தில்தான் எனக்குக் கடினமான கதாபாத்திரம். அழுத்தமான கதைகளைக் கொண்ட படங்களில் நடிப்பதுதான் எனது பலம். அதற்காக முழுமையான பொழுதுபோக்கு படங்களில் பணியாற்ற மாட்டேன் என்று அர்த்தமல்ல” என்றார்.