பீனிக்ஸ் விமர்சனம்: MMA களம், ஆனால் ஏமாற்றும் திரைக்கதை... உயரப் பறக்கிறதா இந்த ஆக்‌ஷன் சினிமா?

பீனிக்ஸ் விமர்சனம்: MMA களம், ஆனால் ஏமாற்றும் திரைக்கதை… உயரப் பறக்கிறதா இந்த ஆக்‌ஷன் சினிமா?


எம்.எல்.ஏ கரிகாலனை (சம்பத் ராஜ்) பட்டப்பகலில் கொடூரமாக க் கொலை செய்கிறான் பதின்பருவ இளைஞன் சூர்யா (சூர்யா சேதுபதி). இந்தக் கொலைக்கான காரணம் என்ன, இதனால் வரும்  எதிர்வினைகளை சூர்யாவால் சமாளிக்க முடிந்ததா என்பதே ‘பீனிக்ஸ்’ படத்தின் கதை.

அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி, இளம் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரராக வருகிறார். அந்த விளையாட்டுக்குத் தேவையான உடற்தகுதியுடன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்வாகு கைகொடுக்கிறது. இருப்பினும், நடிப்பில் தன்னை நிரூபிக்கப் போதிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சீரியஸ் முகத்துடன் அமைதியாக இருக்கிறார்; அல்லது கோபமாக இருக்கிறார், அவ்வளவே!

பீனிக்ஸ் விமர்சனம்
பீனிக்ஸ் விமர்சனம்

படத்தின் சில அழுத்தமான காட்சிகள் அவரது அண்ணன் கர்ணாவாக வரும் ‘காக்கா முட்டை’ விக்னேஷுக்கே கிடைத்திருக்கிறது. MMA வீரராகவே வரும் அவர் கொடுத்த பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் அபி நக்ஷத்திராவும் நடிப்பில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்கிறார்.

கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏவின் பழிவாங்கும் மனைவியாக வரலக்ஷ்மி சரத்குமார், ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிய வில்லி கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பையே கொடுத்திருக்கிறார்.

துணைக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி, தீலிபன், வேல்ராஜ், மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், ஸ்ரீஜித் ரவி, முருகதாஸ் உள்ளிட்ட பல தெரிந்த முகங்கள் நடித்துள்ளனர்.

இவர்களில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவாக வரும் முத்துக்குமார், சம்பத் ராஜுக்குக் குடைச்சல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தனது கலகலப்பான நடிப்பால் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், எடிட்டர் பிரவீன் கே.எல்., இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பணியை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.

அனல் அரசின் ஸ்டன்ட்ஸ் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், திரைக்கதையில் எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக வரும் ஆக்ஷன் காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.

பீனிக்ஸ் விமர்சனம்
பீனிக்ஸ் விமர்சனம்

முக்கியமான MMA காட்சிகளும் இன்னும் சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டிருக்கலாம்.

கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏவுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுத்துவிட்டு, படம் சூர்யா கைது செய்யப்படும் காட்சியில் தொடங்குகிறது.

அவர் யார் என்பதையும் கொலையின் பின்னணி என்ன என்பதையும் சொல்லாமல் முதல் பாதியை நகர்த்துகிறார் அறிமுக இயக்குநரும், சண்டைப் பயிற்சி இயக்குநருமான அனல் அரசு.

சுருக்கமான முதல் பாதி, அடுத்தடுத்து வரும் சண்டைக் காட்சிகளுடன் சீக்கிரமே இடைவேளையை எட்டுகிறது படம்.

ஆனால், வழக்கமான பிளாஷ்பேக் காட்சிகளால் இரண்டாம் பாதியில் படம் அப்படியே தொய்வடைந்து விடுகிறது.

அடுத்தடுத்த சண்டைக் காட்சிகளை இணைப்பதற்காகவே எழுதப்பட்ட சம்பிரதாயமான திரைக்கதை, படத்தின் மிகப்பெரிய மைனஸ்!

சிறையில் சூர்யாவைக் கொல்ல, அடுத்தடுத்து பலவிதமான ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். இதுவே அடுத்தடுத்த சண்டைக் காட்சிகளாக விரிகிறதே தவிர, சுவாரஸ்யம் கூட்டும் அம்சங்கள் திரைக்கதையில் மிஸ்ஸிங்.

படத்தின் அடிப்படையாக இருக்க வேண்டிய பிளாஷ்பேக்கும் எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகளால் நிரம்பியிருக்கிறது.

பீனிக்ஸ் விமர்சனம்
பீனிக்ஸ் விமர்சனம்

முக்கிய பிரச்னையான சிறார் குற்றங்களை மிக மேம்போக்காக அணுகியதும் சிக்கலே. கொலையின் பின்னணி இதுதான் என அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிகிறது.

அப்படி இருக்க, முதல் பாதியில் போலீஸாக வரும் ஹரிஷ் உத்தமன் அப்படி அனைவரிடமும் என்னதான் விசாரித்துக்கொண்டிருந்தார் என்பதும் புரியவில்லை. இப்படி சில லாஜிக் கேள்விகளும் தொக்கி நிற்கின்றன.

இந்தப் போதாமைகளால் விறுவிறு ஆக்ஷன் பறவையாக உயர்ந்து பறந்திருக்க வேண்டிய ‘பீனிக்ஸ்’, சலிப்பூட்டும் ஆக்ஷன் ரீல்ஸ் தொகுப்பாகக் கூண்டிற்குள் முடங்கிவிடுகிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *