சென்னை: கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசியதாவது: “‘ஃப்ரீடம்’ திரைப்படம் அதுவாகவே அமைந்த ஒன்று. இது திட்டமிட்டு நடக்கவில்லை. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸுக்கு முன்பே இதுதான் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ’சுதந்திரம்’ என்று டைட்டில் வைக்க நினைத்தோம். அது ஏற்கெனவே வைத்துவிட்டார்கள். ‘விடுதலை’ என்று வைக்க முடியாது. இப்போது எல்லாமே ஓடிடி நிறுவனங்களின் கையில்தான். டைட்டில் கூட அவர்கள் கைக்கு சென்றுவிட்டது. அதனால் தான் ‘ஃப்ரீடம்’ என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த படத்துக்கே கூட அப்படி செய்யலாம் என்று சொன்னபோது நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கல்வி நிறுவனங்கள் படிப்பதற்கு மட்டுமே. ஆனால் அதை முடிவு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். எதிர்காலத்தில் என் படங்கள் அப்படி கல்வி நிறுவனங்களில் விளம்பரப்படுத்தப்பட்டால் கூட அது அவர்களின் முடிவாகத்தான் இருக்குமே தவிர தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் விருப்பம் இல்ல.” இவ்வாறு சசிகுமார் பேசினார்.