இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் பறந்து போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

குழந்தைகள் வளர்ப்பு, பொருளாதாரத் தேடலோடு இன்றைய நாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எனப் பல விஷயங்களை இந்தப் படைப்பில் காமெடி கலந்து பேசியிருக்கிறார் இயக்குநர் ராம். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதன் கார்க்கி பேசும்போது, “இந்தப் படத்துல பங்கெடுத்துகிட்டதுல ரொம்பவே மகிழ்ச்சி. இந்தப் படத்துக்கு உண்மையான வெற்றி கிடைச்சிருக்கு. உண்மையான வெற்றின்னா, யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றி.
அப்படி கிடைக்கிறது எல்லாம் ரொம்ப அபூர்வம்,” என்றவர், “‘இது காஷ்மீரா கார்காலமா, என் கோவில் புறா, இந்த குளிர் தாங்குமா’னு அப்பா எழுதின வரியை மணி ரத்னம் சார் பார்த்துட்டு, ‘நம்ம காஷ்மீர்ல படம் எடுக்கிறோம்.

அதைப் பாடலிலும் சொல்லணும்னு’ கேட்டிருக்கார். அதன் பிறகுதான் ‘புது வெள்ளை மழை’னு வரிகளை அப்பா எழுதினாரு.
அதே மாதிரி, இந்தப் படத்துல என்ன விஷுவலா இருக்கோ, அதை எழுதலாம்னு ராம் சார் சொன்னாரு. இப்படியான விஷயங்களையெல்லாம் உடைச்ச ராம் சாருக்கு முதல்ல நன்றி.
நா. முத்துக்குமார் இருந்திருந்தா இந்தப் படத்துல நான் பாடல் எழுதியிருக்க மாட்டேன். அப்படி அவங்களுக்கு இடையில ஆழமான நட்பு இருக்கு. இந்தப் படத்தோட வெற்றியில அவருக்கும் பங்கு இருக்கு.
நான் படத்தை முன்னாடி துண்டு துண்டா பார்த்திருந்தேன். பிறகு, பாடல்கள் இல்லாம பார்த்தேன். திரையரங்குகள்ல இப்போ முழுமையா பார்க்கும்போது அவ்வளவு அழகா இருக்கு.
இந்தப் படம் பார்க்கும்போது என்னோட மகன் என்கிட்ட, ‘மக்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுறாங்க.

ஆனா, ஏன் எல்லோரும் அழ வைக்கிற மாதிரியான டார்க் படங்களை எடுக்கிறாங்க’னு கேட்டான். அப்போ நான், ‘ஒருத்தரை அழ வைக்கிறது சுலபம், த்ரில்லர் உணர்வைக் கொடுக்கிறது சுலபம்.
ஆனா, சிரிக்க வைக்கிறது ரொம்ப கடினம்’னு சொன்னேன். அந்தக் காமெடிகள் மூலமா நிறைய விஷயங்களை நம்மை சிந்திக்க வைச்சிருக்கார்.” எனக் கூறினார்.