சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் ரஜினிகாந்த் பேசியதாவது: “தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்குப் பிறகு ஷங்கர் தான். அவர் படங்களில் வெறும் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூக கருத்துகள் இருக்கும், தத்துவம் இருக்கும். ஷங்கருடன் நான் நடித்த படங்கள் மூன்றும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். ‘வேள்பாரி’ உரிமை அவரிடம் தான் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது எப்போது படமாக வரும் என்று எல்லாரையும் போலவே நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நம்முடைய அறிவு சொல்லும் நாம் என்ன பேசவேண்டும் என்று. நம் திறமை சொல்லும் எப்படி பேசவேண்டும் என்று. நம் அனுபவம் சொல்லும் எதை பேசவேண்டும், எதை பேசக் கூடாது என்று. கருணாநிதி குறித்து எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கட்சியில் பழைய மாணவர்களை கட்டி மேய்ப்பது கஷ்டம் என்று கூறினேன். அப்படியிருந்தாலும் கட்சிக்கு பழைய மாணவர்கள்தான் தூண்கள். அவர்கள் தான் அடித்தளம். அனுபவம் அதிகம் கொண்டவர்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.
இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சரியாக பேசவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிவகுமார், கமல்ஹாசன் எல்லாம் அதிகம் படித்தவர்கள். அறிவாளிகள். அவர்களை கூப்பிடாமல் 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இவரை ஏன் கூப்பிட்டார்கள் என்று நினைத்து விடுவார்கள். அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்திருக்கிறேன்” இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், உதயசந்திரன் ஐஏஎஸ், நடிகை ரோகிணி, தொகுப்பாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.