கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் `ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பசரன்’ என்ற வாசகங்களுடன், ஒருவர் கையில் கத்தியுடன் நிற்கும் `அரசன்’ பட போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.
வெற்றிமாறன் – சிம்பு இருவரும் கைகோர்க்கும் முதல் படம் என்பதால், இந்தப் படம் தமிழ் திரையுலகில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தின் டைட்டிலை கலைப்புலி தாணு காலை 8.09 மணிக்குத் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்வதற்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு நடிகர் சிலம்பரசனின் கார் வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்தியஞான சபைக்குள் நுழைந்தது.
அதிலிருந்து இறங்கிய சிலம்பரசன் தர்மசாலை, அணையா அடுப்பு போன்றவற்றைத் தரிசனம் செய்தார். அதையடுத்து சத்தியஞான சபை வளாகத்தில் அமர்ந்து, சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தார்.
அதையடுத்து அணையா விளக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை, வள்ளலார் தண்ணீரைக் கொண்டு விளக்கெரியச் செய்த நற்கருங்குழி போன்ற இடங்களையும் தரிசனம் செய்தார்.