‘கல்யாணப் பரிசு’ மூலம் இயக்குநராக அறிமுகமான சி.வி.ஸ்ரீதர், அதற்கு முன் எதிர்பாராதது, அமரதீபம், மஞ்சள் மகிமை போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ‘மாமன் மகள்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநரான ஆர்.எஸ்.மணி இதன் கதையை எழுதி இயக்கி, தயாரித்தார்.
ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த இதில், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, டி.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.துரைராஜ், சி.கே.சரஸ்வதி, எஸ்.ஆர்.ஜானகி என பலர் நடித்த இப் படம், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது.
கோடீஸ்வரர் தர்மலிங்கத்தின் மகள் சாவித்திரி. காணாமல் போன தனது தம்பி மகனை கண்டுபிடித்து அவனுக்குத்தான் சாவித்திரியை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் காலமாகி இருப்பார், தர்மலிங்கத்தின் மனைவி. அவருடைய நண்பரான பாலையாவுக்கு சொத்துகளை அபகரிக்க ஆசை. அதனால் மருமகனைத் தானே தேடி வருவதாகச் சொல்லி, சந்திரபாபுவை பொய்யாக அழைத்து வருகிறார். திருமணம் நடந்தால் சொத்துகளைக் கைப்பற்றிவிடலாம் என்பது அவர் எண்ணம்.
இதற்கிடையே, எதற்கெடுத்தாலும் பயம் கொள்ளும் பெண்களைக் கண்டாலே கூச்சப்படும் ஜெமினி கணேசனுக்கு, சாவித்திரியைக் கண்டதும் காதல் வருகிறது. ஜெமினிதான் சிறு வயதில் காணாமல் போன மாமன் மகன். ஒருகட்டத்தில், சாவித்திரி தன்னுடைய அத்தை மகள் என்று தெரிய வந்ததும் காதல் அதிகமாகிறது. தோட்டக்காரர் வேடம் போட்டு சாவித்திரியின் வீட்டுக்குச் செல்லும் ஜெமினி, அங்கு நடக்கும் விஷயங்களைக் கவனிக்கிறார். பிறகு பாலையாவின் சொத்து அபகரிப்புத் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது கதை. எளிதாக யூகித்துவிடக் கூடிய கதையை, அழகாக இயக்கி இருந்தார், மணி.
டைட்டில் கார்டில் ஜெமினி கணேசன் பெயரை, ஆர்.கணேசன் என்று போட்டிருப்பார்கள். படத்தில் ஜெமினி-சாவித்திரி கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. டி.எஸ்.பாலையா வில்லனாக மிரட்டியிருப்பார். படத்தின் வெற்றிக்கு சந்திரபாபுவின் காமெடி காட்சிகளும் காரணம். அவருடன் இணைந்து நடித்த துரைராஜும் காமெடியில் கலக்கியிருப்பார்.
நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைத்திருந்தார். பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், சுரபி, ஆத்மநாதன், சீத்தாராமன், கம்பதாசன் பாடல்களை எழுதியிருந்தனர். ‘என்றுமில்லா புது இன்பச் சுழலிலே’, ‘அதிசயமான ரகசியம்’, ‘தேவி நீயே துணை’, ‘ஆசை நிலா சென்றதே’, ‘நெஞ்சிலே உரமிருந்தால்…’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
பாடல்களை ஜிக்கி, ஏ.எம்.ராஜா, டி.வி.ரத்னம், டி.எம்.சவுந்தரராஜன், சந்திரபாபு பாடினர். மற்ற பாடல்களை விட, சாவித்திரியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு சந்திரபாபு பாடும் ‘கோவா மாம்பழமே… மல்கோவா மாம்பழமே’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இப்போதும் பலருடைய விருப்பத்துக்குரிய பாடலாக இது இருக்கிறது.
கோடீஸ்வரராக டி.பாலசுப்பிரமணியம் சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தார். நாடகப் பின்னணியில் இருந்து வந்த இவர், மிகைப்படுத்தலின்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் ஒருவராக அந்த கால கட்டங்களில் இருந்தார். 1955-ம் ஆண்டு அக், 14-ம் தேதி வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது.