நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த பி.யு.சின்னப்பாவுக்கு ஆரம்பத்தில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தொடர்ந்து நல்ல வாய்ப்புகளும் வராததால், சினிமா வேண்டாம் என்று சாமியாராகிவிட முடிவு செய்தார். அதற்காக விரதமும் மேற் கொண்ட நிலையில், டி.ஆர்.சுந்தரத்தின் ‘உத்தம புத்திரன்’ (1940) வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு.
தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேட படமான இது வெற்றி பெற்றதை அடுத்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார், சின்னப்பா. இந்தப் படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பி.யு.சின்னப்பாவை ஹீரோவாக்கி ‘தர்மவீரன்’ என்ற படத்தையும் தயாரித்தது. சம்பத்குமார் இயக்கிய இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த படம், ‘ஆர்யமாலா’.
பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்தது . சேலத்தை சேர்ந்த கே.எஸ்.நாராயண ஐயங்கார், நாராயணன் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வந்தார். அவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. முதலில் படங்களை விநியோகம் செய்தது இந்நிறுவனம். நாராயண ஐயங்காரின் ஏஜென்டாக செயல்பட்ட ஸ்ரீராமுலு நாயுடு அவருடன் இணைந்து பக்ஷிராஜா பிலிம்ஸ் மூலம் தயாரித்த முதல் படம் ஆர்யமாலா.
புராணக் கதையின் அடிப்படையில் உருவான படம் இது. சிவபெருமான் தேவலோக நந்தவனத்தைக் காவல் காப்பதற்காக காத்தவராயனை உருவாக்கினார். அங்கு வரும் சப்தகன்னிகளில் இளங்கன்னி என்ற தேவலோகப் பெண்ணைக் காதலிக்கிறான், காத்தவராயன். காதலிக்க முயற்சிக்கும்போது, அவள் தன்னை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்கிறாள். பின் அவள் மீண்டும் இளவரசியாகப் பிறக்கிறாள். ஆர்யமாலா என்ற அவளை, காத்தவராயன் மீண்டும் காதலிக்கிறான்.
கிளியாக மாறி அவளுடைய அரண்மனைக்குச் செல்கிறான். கிளியை விரும்புகிறாள் அவள். ஆனால் அது காத்தவராயன் என தெரியும் போது, ஆர்யமாலா அதிர்ச்சியடைகிறாள். அவள் மீண்டும் தன்னை மூழ்கடிக்க முயற்சிக்கும்போது, விஷ்ணு காப்பாற்றி அவளை கல்லாக மாற்றுகிறார்.
காத்தவராயன் கல்லைத் தொடும் போது ஆர்யமாலா மீண்டும் தன் வடிவத்தை அடைகிறாள். ஒருகட்டத்தில் காத்தவராயன், மன்னரால் சிறைபிடிக்கப் பட்டு கழுவேற்றச் செல்லப்படுகிறார். விஷ்ணு தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைக்கிறார். காத்தவராயனும் ஆர்யமாலாவும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வது கதை.
காத்தவராயனாக பி.யு.சின்னப்பா நடித்தார். அவருடைய நண்பன் சின்னானாக என்.எஸ். கிருஷ்ணனும் பாலராயனாக டி.எஸ்.பாலையாவும் பார்வதி தேவியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியும் ஆர்யமாலாவாக எம்.எஸ்.சரோஜினியும் நடித்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு சரோஜினி புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அவருடைய மூத்த சகோதரி எம்.எஸ்.மோகனாம்பாள், 1930-களில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்தார். ஆரவல்லியாக டி.ஏ.மதுரம் நடித்தார். எஸ்.ஆர்.ஜானகி, குளத்துமணி, ஏ.சகுந்தலா, பி.எஸ்.ஞானம், ஏ.ஆர்.சகுந்தலா, பி.ராஜகோபால ஐயர் என பலர் நடித்தனர்.
பொம்மன் இரானி இயக்கிய இந்தப் படத்தின் கதை, வசனத்தை டி.சி.வடிவேல் நாயக்கர் எழுதினார். சி.ஏ.லட்சுமண தாஸ் பாடல்களை எழுத, ஜி.ஏ.ராமநாதன் இசை அமைத்தார். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய ‘ஆரவல்லியும் நீயும் வீணாய்’, எம்.ஆர்.சந்தானலட்சுமி பாடிய ‘லாவண்ய ரூபனே’ பாடல்களைத் தவிர பிறப்பாடல்களை பி.யு.சின்னப்பா பாடினார். ‘ஸ்ரீமதியே உனை நான்’, ‘வளையல் நல்ல வளையல்’ உள்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி, சின்னப்பாவுக்கு மேலும் புகழை தந்தது. அந்தக் கால விமர்சகர்களும் ரசிகர்களும் தியாகராஜ பாகவதரிடம் இல்லாத நடிப்புத் திறமையும் சண்டைக் காட்சி யில் வெளிப்படும் ஆக்ரோஷமும் சின்னப்பாவிடம் இருப்பதாகக் கூறி வந்தனர். அப்போதைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை விட, சின்னப்பா சிறந்தவர் என்று ஒப்பிட்டும் விமர்சித்தனர்.
பாகவதர் ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த நிலையில் சின்னப்பாவுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. யார் சிறந்த நடிகர் என்று இருவரின் ரசிகர்களுக்கும் விவாதங்கள் நடக்கத் தொடங்கின. சில இடங்களில் மோதலும் ஏற்பட்டன. 1941-ம் ஆண்டு அக்.19-ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை மறு ஆக்கம் செய்து 1958-ம் ஆண்டு ‘காத்தவராயன்’ என்ற பெயரில் படமாக்கினர். சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த இதை டி.ஆர்.ராமண்ணா இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது.
– egnathraj.c@hindutamil.co.in