சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதுவரை நடந்த விசாரணையில், இளையராஜா இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று (அக்டோபர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது இளையராஜா தரப்பிலிருந்து, “சோனி நிறுவனம் இதுவரை எந்தப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. தற்போது வெளியாகியுள்ள ‘டியூட்’ திரைப்படத்தில்கூட இளையராஜாவின் 2 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.
மறுபக்கம் சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயணன், “பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.
இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசையமைப்புகளின் பதிப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இளையராஜா பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.