இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படம் மாமன். இந்தப் படத்துக்குப் பிறகு, இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் `மண்டாடி” திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.
இதற்கிடையில், நடிகர் சூரி தன் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. மதுரையில் இருக்கும் ராஜாக்கூர் கிராமத்தில் நடிகர் சூரி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கிராமத்தில் இருக்கும் உறவினர்களுடன் அவர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார்.
அந்த வீடியோவை `எங்கள் ராஜாக்கூர் மண்ணின் மகிழ்ச்சியில், குடும்பத்தோடு தீபாவளி’ எனக் குறிப்பிட்டு தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு அவரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதில் ஒருவர் `திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை’ எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் சூரி, “திண்ணையில் இல்லை நண்பா பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” எனப் பக்குவமாக பதிலளித்திருக்கிறார்.