நெல்சன் இயக்கத்தில் ரஜினி – கமல் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட வருடங்கள் கழித்து, தற்போது ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின் கடும் எதிர்மறை விமர்சனத்தால் இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதைகள் இருக்கிறதா என்று சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதையொன்றை ரஜினியிடம் கூறியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்துவிடவே, அவரையே இயக்குநராக முடிவு செய்திருக்கிறார்கள்.
ரஜினி – கமல் – நெல்சன் கூட்டணி குறித்த அறிவிப்பு எல்லாம், ‘ஜெயிலர் 2’ வெளியீட்டுக்கு பின்பே வெளியாகும் என கூறப்படுகிறது. இப்போதே வெளியிட்டால் ‘ஜெயிலர் 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கும் என்பதே இதற்கு காரணம். இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் – ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள்.

