1999-ல இந்தியில முதல் வாய்ப்பு வந்துச்சு. அடுத்த வருஷமே பிரபுதேவாகூட ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ வாய்ப்பு. எனக்கு தென்னிந்தியப்படங்களோட கதைகள் ரொம்ப பிடிக்கும். அப்புறம் இளையராஜா சாரோட மியூசிக் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ‘முக்காபுலா’ பாட்டு மூலமா பிரபுதேவாவை நல்லா தெரியும். அவர்கூட நடிக்கணும்; ஹீரோயின் கேரக்டர் ஒரு டாக்டர்னு டைரக்டர் எழில் கதை சொன்னாரு. உடனே ஓகேன்னு சொல்லிட்டேன். என்னோட அடுத்தப்படம் ‘சாமுராய்’லயும் எனக்கு டாக்டர் கேரக்டர்தான். என்னோட டாக்டர் கனவு எப்படியோ நிறைவேறிடுச்சு”னு சிரிக்கிற ஜெயா சீல், ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாட்டு தனக்கு கிடைச்சிது பெரிய அதிர்ஷ்டம்னு சொல்றாங்க.

”பெண்ணின் மனதைத் தொட்டு படம் வந்து 25 வருஷம் ஆகிடுச்சு. ஆனா, அந்தப்பாட்டை இன்னும் யாரும் மறக்கல. நான் நாட்டியகலா கான்பிரன்ஸுக்காக சென்னைக்கு வருவேன். அப்படி வர்றப்போ ஆட்டோவுலதான் வெளியே போவேன். ஒருமுறை ஓர் ஆட்டோ டிரைவர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிட்டார். ‘நீ கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் பாட்டு பொண்ணு தானே’ன்னு சந்தோஷமா கேட்டார். சென்னையில மட்டுமில்லீங்க, லண்டன், சிங்கப்பூர்னு வெளிநாடுகளுக்குப் போனப்போவும் ‘கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன்’ பாட்டுல வந்த நடிகையாதான் என்னை அடையாளம் கண்டுபிடிச்சாங்க. இதுக்கெல்லாம் படத்தோட டைரக்டருக்கும் மியூசிக் டைரக்டருக்கும்தான் நன்றி சொல்லணும்” என்பவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ், பெங்காலி, ஒடியா, அசாமின்னு இதுவரைக்கும் 8 மொழிகள்ல, 19 படங்கள் நடித்திருக்கிறார்.