டெம்ப்ளேட்டான ‘ஸ்ட்ரிக்ட் கல்லூரி முதல்வர்’ கதாபாத்திரத்தில் வந்தாலும், அதன் வோல்டேஜை அறிந்து, பக்குவமான நடிப்பை வழங்கி மனதில் நிற்கிறார் மிஷ்கின். அவரின் பாத்திரப் படைப்பும் வில்லனிசத்துக்குள் நுழையாமல் நியாயத்தின் பக்கம் நிற்பது முதிர்ச்சியானதொரு எழுத்து! ஜார்ஜ் மரியம், இந்துமதி மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. கௌதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் வந்து போகிறார்கள். விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோரின் கலகல மோடு நடிப்பை, கச்சிதமாகத் திரைக்கதைக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கலர்ஃபுல் காலேஜ் ஸ்டோரிக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறது நிகேத் பொம்மியின் கேமரா. வெவ்வேறு காலகட்டக் கதைகளை நேர்கோட்டில் கச்சிதமாகக் கோர்த்ததோடு, கட்களால் கலகலப்பான காட்சிகளுக்குச் சுவாரஸ்யத்தையும் கூட்டியிருக்கிறது பிரதீப் இ.ராகவ்வின் படத்தொகுப்பு. முக்கியமாக, படத்தின் திரைமொழிக்கு மைலேஜைக் கூட்டியிருக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையில் வரும் ஒரு டஜன் பாடல்களில், ‘வழித்துணையே’, ‘ரைஸ் ஆஃப் டிராகன்’ ஆகியவை மட்டும் முணுமுணுக்க வைக்கின்றன. தன் பின்னணி இசையால், பல காட்சிகளை மெருகேற்றி, தியேட்டர் மொமன்ட்களாகவும் மாற்றியிருக்கிறார்.

டிராகனின் கல்லூரி சேட்டைகள், நண்பர்களுடனான கொண்டாட்டம், காதல் தோல்வி, குடும்பப் பின்னணி என நகரும் முதல் பாதி திரைக்கதை, சில பல வழக்கமான காட்சிகளால் டல் அடித்தாலும், அதே வழக்கமான காட்சிகளைச் சின்ன சின்ன சுவாரஸ்ய திரைமொழியால் ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார் இயக்குநர். சில லாஜிக் ஓட்டைகள், முகம் சுழிக்க வைக்கும் கெட்ட வார்த்தைகள் போன்ற தடைகளைத் தாண்டி, இண்டர்வெலில் பீக் அடிக்கும் படம், இரண்டாம் பாதியில் பரபரப்போடு கலகலப்பும் சேர இரட்டை எஞ்ஜினில் பயணிக்கிறது.