2022-ல் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான ‘ஜெர்சி’ படத்தை இயக்கி கவனம் பெற்றார் கவுதம் தின்னனூர். இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் கைகோத்திருக்கும் படம்தான் ‘கிங்டம்’.
முரட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் கலந்து ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா). சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன தனது அண்ணன் சிவாவை (சத்யதேவ்) தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். தன்னுடைய உயரதிகாரியை அறைந்ததால் ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறார். இலங்கைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு தீவில் உள்ள பழங்குடியினருடன் வாழ்ந்து வரும் தன் அண்ணனை கண்டுபிடிக்கவும், அந்த பழங்குடியினருடன் கலந்து, அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கும்பலை கண்டறியும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் அண்ணனை சூரி கண்டுபிடித்தாரா? தன்னிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினாரா என்பதற்கு விடை சொல்கிறது ‘கிங்டம்’.
படம் தொடங்கியதுமே நேரடியாக கதைக்குள் நுழைந்து விடுகிறது. நாயகனின் அறிமுகம், அவரின்நோக்கம், பின்னணி என அனைத்தும் அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு புரிந்து விடுவதால், அடுத்தடுத்த காட்சிகளுடன் நம்மால் எளிதில் ஒன்றிவிடமுடிகிறது. நாயகனின் அண்ணனை உடனடியாக காட்டிவிடாமல் ஒரு சிறிய பில்டப்புடன் அறிமுகம் செய்தது சுவாரஸ்யம் தருகிறது. இங்கிருந்து தொடங்கும் கதை, அடுத்தடுத்து நகர்ந்து இடைவேளை வரை எந்த தொய்வும் இன்றி செல்கிறது.
முதல் பாதியில் கதையை நன்கு ‘செட்’ செய்தத்தில் இயக்குநர் கவுதம் தின்னனூர் கவனிக்க வைக்கிறார். அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்சினையே இரண்டாம் பாதியில் தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது.
சூர்யா நடித்த ‘ரெட்ரோ’, பிரபாஸின் ‘சலார்’ போன்ற படங்களின் வாடை இரண்டாம் பாதியில் ஹெவியாக வருகிறது. போலீஸ் இன்ஃபார்மரை கண்டுபிடிப்பதாக தொடங்கி க்ளைமாக்ஸ் வரை நீளத்தை கத்தரித்திருந்தால் கொஞ்சம் ஷார்ப் ஆக வந்திருக்கலாம். ஆனால், ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் ஒரு கட்டத்தில் கொட்டாவியை வரவழைத்து விடுகிறது. கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் இடம்பெற்றுள்ள அதீத வன்முறையை பார்க்கும்போது இப்படத்துக்கு எப்படி யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கத் தகுந்த படம் அல்ல.
விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது. போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு. பாக்யஸ்ரீ போஸுக்கு படத்தில் எந்த வேலையும் இல்லை. வில்லனாக வரும் நடிகர் வெங்கடேஷ் பார்ப்பதற்கு சூர்யாவை நினைவுப்படுத்துகிறார். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.
படத்தின் உண்மையான ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும் தான். குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் பிரிட்டிஷ் காலத்து காட்சியில் ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அட்டகாசம். ஒளிப்பதிவை பொறுத்தவரை நிச்சயம் இது ஒரு பெரிய திரைக்கான படமே. பாடல்களிலும் பின்னணி இசையிலும் அனிருத் பின்னியெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தொய்வான இரண்டாம் பாதியில் ஓரளவு உட்கார்ந்து பார்க்க வைப்பதே அவருடைய இசைதான்.
படத்தில் ஏகப்பட்ட லாகிஜ் ஓட்டைகள். ராணுவமே தேடிக் கொண்டிருக்கும் ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வரும் ஹீரோ, ஒரு போன் காலில் தப்பிப்பது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. அதேபோல அண்ணன் – தம்பி தொடர்பான காட்சிகள் உட்பட எங்கும் எமோஷனல் அம்சங்கள் இல்லாதது மற்றொரு பெரிய குறை. க்ளைமாக்ஸ் வரை படத்தில் அது எங்கும் கைக்கூடவில்லை.
முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யமான கதை சொல்லல், இரண்டாம் பாதியில் முற்றிலுமாக காணாமல் போனதால் சுமாரான வகைப் படமாக தேங்கிவிட்டது இந்த ‘கிங்டம்’. ‘ஜெர்சி’ படத்தை எடுத்த கவுதம் தின்னனூரிடமிருந்து எமோஷனல் காட்சிகளை எதிர்பார்த்துச் செல்லும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே.