உலகத்தின் மிகப்பெரிய இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்று
பேசத் தொடங்கிய லிடியன் நாதஸ்வரம், “மிகவும் முக்கியமான வேலையைச் செய்து முடித்திருக்கிறோம். தமிழ் மொழியின் தலைசிறந்த நூலான திருக்குறளை மையப்படுத்தி இந்தப் புராஜெக்டைச் செய்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.
நிறைய தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு பொருள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு திருக்குறளின் முழுமையான பொருள் சென்று சேரவில்லை. அதைச் சரியாகக் கொண்டுபோய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
இந்தப் புராஜெக்டிற்காக திருக்குறளுக்கு சக்திவாசன் என்பவர் உரை எழுதிக் கொடுத்திருக்கிறார். 2014-ம் ஆண்டின் முடிவில்தான் இதனை நாங்கள் தொடங்கினோம். அப்போது என்னுடைய அக்கா அமிர்தவர்ஷினிக்கு 12 வயது.

அப்போது எனக்கு 9 வயது. அறம், பொருள், இன்பம் என முப்பாலின் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்து அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும் என்பதற்காக அப்போது அதை நிறுத்திவிட்டோம்.
சொல்லப்போனால், அந்த நேரத்திலேயே என்னுடைய சகோதரி 400 குறள்களுக்கு டியூன் செய்து முடித்துவிட்டார். பிறகு 10 வருட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் அதைத் தொடங்கியிருக்கிறோம்.
அதற்கிடைப்பட்ட நேரத்தில் நானும் என் சகோதரியும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். கிட்டத்தட்ட 35 புதிய இசைக் கருவிகளை நான் இசைக்கக் கற்றுக்கொண்டேன். நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும் திருக்குறளை வெவ்வேறு இசை வகைகளில் கொடுத்திட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செய்திருக்கிறோம்.
இந்தப் புராஜெக்டில் மொத்தமாக 1330 பாடல்கள் இருக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்,” என்றார்.