தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்ததுடன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து சகாப்தமாய் திகழ்ந்தவர் “ஆச்சி’ மனோரமா. அவரின் மகன் பூபதி (வயது 70), உடல் நலக்குறைவால் இன்று காலமானார். மறைந்த பூபதி ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘தூரத்து பச்சை’ உள்பட சில படங்களில் நடித்தவர். இதில் மகனுக்காக ‘தூரத்து பச்சை’ படத்தை தயாரித்தார் மனோரா. சின்னத்திரையிலும் சில தொடர்களில் நடித்திருக்கிறார் பூபதி.
மறைந்த பூபதியின் நினைவுகள் குறித்து 35 ஆண்டுகள் மனோரமாவிடம் மேனேஜராக பணியாற்றியவரும், திரைப்பட மக்கள் தொடர்பாளருமான ‘திரைநீதி’ செல்வத்திடம் பேசினோம்.
”திரையுலகில் மனோரமாவின் சாதனையை இன்று வரை யாராலும் நிரப்ப முடியல. மனோரமா மிக மிக அன்பானவர். எளிமையானவர். தஞ்சையில் மன்னார்குடியில் ஜமீன் போல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்னாலும் அவரது ஆரம்ப காலங்கள்ல ரொம்பவும் ஏளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பூபதி, ஒரே மகன் என்பதால் அவரிடம் மொத்த பாசத்தையும் காண்பித்து வளர்ந்தார். பூபதி சில படங்கள்லயும் நடிச்சிருக்கார். அவரது நடிப்பு திறனை வளர்த்துக்கொள்ள மனோரமா, மகனுக்கென தனியாக நாடக மன்றமும் ஆரம்பிச்சார். அம்மா மாதிரியே பூபதியும் அருமையாகப் பாடுவார். மகனை நல்லா படிக்கவும் வச்சிருக்கார் ஆச்சி. பட்டப்படிப்பும் முடிச்சிருக்கார் பூபதி.

மனோராவிற்கு இருக்கும் பெயருக்கும், புகழுக்கும், நடிப்பு திறமைக்கும் பூபதியும் ஒரு பெரியளவுல வந்திருக்க வேண்டியவர். அவர் நடித்த ஒருசில படங்கள்லகூட நல்ல பெயர் வாங்கிருந்தாலும் அவரின் திறமைகளை வளர்ப்பதில் எந்த முன்னெடுப்பும் காட்டாமல் விட்டுட்டார். ஓரளவு அவர் ஆர்வம் காட்டியிருந்தால்கூட, மனோராமாவின் புகழை வைத்து பெரியளவில் வந்திருப்பார். சில வாரங்களுக்கு முன்னாடிகூட அவரைப் பார்த்தேன். வேலை அவசரத்துல அவருடன் பேசாமல் வேகமாகப் போனதைப் பார்த்து ஒரு சிரிப்புடன் என்னை பார்த்து கையசைத்தது இன்னமும் ஞாபகத்துல இருக்கு.” என கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொண்டார் திரைநீதி செல்வம்.