நாயகனின் நண்பர்களாக நவீன் பிள்ளை, நிவாஷினி நடிப்பில் குறைகளில்லை. படத்தின் மையமான அஷ்வின் – மீராவின் காதல் கதைக்கு, இருவரின் பின்கதையும் நன்றாக உதவியிருக்கிறது. விடலைப் பருவ காதலியாக வரும் வைபவியின் நடிப்பு கவர்ச்சி எபிசோடு! இயக்குநர் மிஷ்கின் மிஷ்கின்னாகவே வரும் இடங்கள் அதகளம். சித்தப்பாவாக கருணாகரன் ஆங்காங்கே ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். அளவாகப் பேசி காமெடி செய்யும் ரெடின் கிங்ஸ்லி வரும் சில இடங்கள் கலகல!
படத்தின் இளமைத் துடிப்பையும், காதலின் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறது ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு. பருவ மாற்றங்களை ஒளியுணர்வில் கொண்டு வந்திருப்பது சிறப்பு. சிறப்பான ‘கட்’களால் அதனைச் சிதைவில்லாமல் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரணவ். இருப்பினும் முதல் பாதியிலிருந்த நேர்த்தி, இரண்டாம் பாதியில் காணவில்லையே என்ற எண்ணம் எழாமல் இல்லை. படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினின் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் ‘ஓஹோ எந்தன் பேபி’ பாடல் இனிமையான மெலோடி. படத்தின் பின்னணி இசை, காதல் காட்சிகளுக்குக் கைகொடுக்கிறது.
‘சினிமாவுக்குள் சினிமா’ என்ற ஃபார்மேட்டில் காமெடி, காதல், எமோஷன் என்ற பார்முலாவில் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார். இதில் அஷ்வின் தன் கதையைச் சொல்வது, அதை விஷ்ணு விஷால் கேட்பது, இடையிடையே மிஷ்கின் வருவது ஆகிய இடங்கள் எல்லாம் காமெடி ட்ரீட்! முதல் இரண்டு காதல் கதைகளும் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப ஜாலியாக சீக்கிரமாக முடிந்தாலும், அதில் தன்பாலின ஈர்ப்பாளர்களை வைத்துவரும் நகைச்சுவையைத் தவிர்த்திருக்கலாம். முதல் பாதி அலுப்படையச் செய்யாமல் செல்ல, இன்றைய இளைஞர்களின் உறவு பிரச்னைகளை நேரடியாக அட்ரஸ் செய்யும் “நீ டாக்ஸிக்” என்று ரெடின் கிங்ஸ்லி சொல்லும் வசனம் முக்கியமானது.