சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன.
இயக்குநர் ராமின் ‘அன்பு சூழ்’ உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் ‘நின்றுவிடுவது’ படத்திற்குப் பலம்.
கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு!
காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்!
தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார்.

அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது.
இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொல்வது இயக்குநருடைய அன்பின் அதிகப்பிரசங்கித்தனம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு!
நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்… அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த ‘பறந்து போ’.