விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்’ திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் இயக்குநர் செல்வராகவனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இப்படத்திற்காக அவரைச் சந்தித்து சினிமா விகடன் யூட்யூப் தளத்திற்கு பேட்டி கண்டோம். நடிகராகவும், இயக்குநராகவும் பல்வேறு விஷயங்களை அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

செல்வராகவன் பேசும்போது, “நடிப்புக்காக நான் எதுவும் பண்ணமாட்டேங்க. அதுவாக வரணும். படத்தை இயக்கும்போது வசனங்கள் மூலமாக எமோஷனை சொல்ல வேண்டிய டாஸ்க் இருக்கும்.
நடிப்பில் நம் எக்ஸ்ப்ரெஷன்கள் மூலமாக எமோஷனை சொல்லணும்.
`ஆர்யன்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் என்னுடைய கதாபாத்திரம் முழு படத்திலும் பயணிக்கும். விஷ்ணு விஷாலுக்கு பெரிய மனசு இருக்கு.
அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் எனக்கு விட்டுக்கொடுத்திருக்காரு.” என்றவர்,“ எனக்கு இப்போ பல வித்தியாசமான கதைகளைச் சொல்றாங்க.
ஆனா, எனக்கு சொல்ற கதைகள்ல சிலவற்றை படமாக மாறாது. அப்படி எனக்கு சொல்லப்பட்ட நல்ல கதைகள் இன்னைக்கு வரைக்கும் டேக் ஆஃப் ஆகாமல் இருக்கு.
நடிக்க வந்ததுக்குப் பிறகு நம்மை கவனிச்சுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அதெல்லாம் கொடுமைங்க! கை, கால் என அனைத்தையும் பார்த்துக்கணும்.
அவ்வளவு விஷயங்களைப் பார்த்துக்க எனக்கு பொறுமை இல்ல. `ஒரு நாள் நடிப்போட கஷ்டம் தெரியும்’னு தனுஷ் சொன்னாரு.

அது இப்போ தெரிஞ்சுடுச்சு. நான் நடிப்பின் பக்கம் வருவேன்னு சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல.
இயக்குநர் என்கிட்ட பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கும்போது கொஞ்சம் கடுப்பாகதான் இருக்கும். இப்போ நான் கண் சிமிட்டகூடாதுனு சொல்வேன்னு நிறைய நடிகர்கள் சொல்வாங்க.
அது நடிப்பின் ஒரு பகுதிதான். அதை நான் சொல்லும்போது வில்லனாகிட்டேன். ஒரு இயக்குநராக தனுஷைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாகதான் இருக்கு.
எப்படி இரவு, பகல்னு இப்படி வேலை செய்கிறார்னு ஆச்சரியமாக இருக்கும்.” என்றார்.
“நான் பெரும்பாலான நேரம் எழுதிட்டேதான் இருப்பேன். `புதுப்பேட்டை 2′ படத்துக்கான கதையை எழுதி முடிக்கப்போறேன். எப்போதுமே வேலை செய்துகிட்டேதான் இருப்பேன்.
`7ஜி ரெயின்போ காலனி 2′, `மென்டல் மனதில்’ என நான் இயக்கி வரும் இரண்டு படத்தின் படப்பிடிப்பும் 60 சதவீதம் முடிந்துவிட்டது.
அடுத்த வருடம் இரண்டு படங்களையும் எதிர்பார்க்கலாம். அந்தப் படங்களைப் பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன்.

தியேட்டருக்கு வந்து எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுங்க! இரண்டும் வித்தியாசமான படங்கள்தான். அதிலும் `7ஜி ரெயின்போ காலனி 2′ படம் எடுக்கிறதே கஷ்டம்.” என்றவர், “எனக்கு தியேட்டர்ல படம் பார்க்கதான் பிடிக்கும்.
ஆனா, அந்தப் பக்கம் போனாலே ரசிகர்கள் `ஆயிரத்தில் ஒருவன் 2′ பத்தி கேள்வி கேட்கிறாங்க. ஓடிடி-யிலதான் இப்போ படம் பார்க்க முடியுது.” என முடித்துக்கொண்டார்.

