பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, 2010 ஆம் ஆண்டு “டபாங்க்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில், ‘லிங்கா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏழு ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரான ஜாகீர் இக்பாலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். தனது காதல் வாழ்வு பற்றியும் தன் பெற்றோரின் கடுமையான வளர்ப்பு குறித்தும் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பகிர்ந்தார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
இது குறித்துப் பேசிய அவர், “நான் வேலைக்கு சென்றபோது நேரத்திற்கு வீட்டுக்கு வந்து சேர வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தன. 32 வயது வரை வீட்டில் எனக்கு இக்கட்டுப்பாடுகள் இருந்தது. நான் கட்டுப்பாடுகளை எப்போது மீறினாலும், அதற்கு ஜாஹீர் மட்டுமே காரணம். பின்னர், வீட்டின் சட்டத்தை மீறியதற்காக நான் அதற்குரிய அறிவுரையை பெறுவதும் வழக்கம். ராமாயணம் என்ற கட்டிடத்தின் 10வது மாடியில் நான் வசித்து வந்தேன். அம்மாவும் அப்பாவும் அதே கட்டிடத்தின் ஐந்தாம் மாடியில் வசித்து வந்தனர். ஜா என்கிற கண்டிப்பான டெலிபோன் ஆபரேட்டர் ஒருவர் அக்கட்டிடத்தில் பணிபுரிந்த நிலையில், என் கார் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவர் என் தாய் தந்தையை அழைத்து, ‘குழந்தை வந்துவிட்டது’ என தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஓரிரு முறை, என் பெற்றோரை அழைத்து என் வருகை குறித்துத் தெரிவிக்க வேண்டாம் என ஆபரேட்டரை அணுகி வேண்டுகோள் வைத்ததும் நினைவிருக்கிறது. நான் எத்தனை மணிக்குத் திரும்பினேன் என அம்மா மறுநாள் என்னை விசாரிக்கும் வேளையில், அந்த டெலிபோன் ஆப்ரேட்டர் என்னுடைய வருகை பற்றி கூறவில்லை என எனக்குத் தெரியும். அதனால், நான் சமாளிக்க பொய் சொல்வேன். இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் கதைதான். இல்லாவிட்டால், நள்ளிரவில் எங்கு இருந்தாய் என கேள்வி கேட்பதோடு என்னை திட்டவும் செய்வார். உண்மையில் என் தந்தை தோழமையான நபர். அவர் என்னை ஒருபோதும் திட்டியதில்லை” என தன் அனுபவங்களை பகிர்ந்தார்.