சென்னையை அடுத்த மாமண்டூரில் மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் நிறுவிய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர்.
பெரம்பலூரைத் தலைமையிடமாக் கொண்டு இயங்கி வரும் தனலட்சுமி ஶ்ரீனிவாசன் கல்விக் குழுமம் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியை நிர்வகிப்பதில் சிரமங்களைச் சந்தித்து வந்ததாலேயே இப்படியொரு முடிவை விஜயகாந்த் குடும்பம் எடுத்ததாகத் தெரிய வருகிறது. சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு கொடுத்து விஜய்காந்தின் கல்லூரியை தனலட்சுமி ஶ்ரீனிவாசன் கல்விக் குழுமம் வாங்கியிருக்கலாமென்கிறது முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று.

கல்லூரி கை மாறியது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“‘கேப்டன் நினைச்சிருந்தா சினிமாவுல சம்பாதிச்சதை முதலீடா போட்டு ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கியிருக்கலாம். முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் இப்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வச்சிருக்காங்களே, அப்படி இவர்கிட்டயும் இருந்திருக்கும். ஆனா அப்படிச் சம்பாதிக்க அவர் விரும்பல.
அவர் சினிமாவுல உச்சத்துல இருந்தப்ப, அவர்கிட்ட எத்தனையோ பேர் இந்த ஐடியாவைச் சொல்லியிருக்காங்க. ‘அடப் போங்கப்பா, அரசாங்கம் கல்வியை இலவசமாத் தரணும்னு சொல்லிட்டிருக்கேன். நாளைக்கு கட்சி ஆரம்பிச்சா, அதைத்தான் நாம் வலியுறுத்தணும். தவிர படிப்பை வியாபாரமா ஆக்கறதுல எனக்கு உடன்பாடில்ல. முடிஞ்சா நாலு பேரைப் படிக்க வைக்கணும், அதை விட்டுட்டு காலேஜ் தொடங்குறேன், சம்பாதிக்கறேன்னு இறங்கறதுக்கு நான் ஆள் இல்லை’ன்னு அவங்ககிட்டச் சொன்னவர்.