சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான “வீர தீர சூரன் பாகம் 2′ படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, ‘சைலன்ட் ஃபேன்பாய் சம்பவம்’ என்று பாராட்டுக்களை அள்ளி வருகின்றனர். இந்நிலையில் விக்ரமின் 63வது படம் குறித்த அப்டேட்களை விசாரித்ததில் கிடைத்தவை இங்கே.
விக்ரமிடம் ஒருமுறை ”உங்களின் கனவு கேரக்டர் எது?” என்று கேட்டபோது, ”எனக்குக் கனவு கேரக்டர்னு ஒண்ணும் கிடையாது! வித்தியாசம் மிளிரும் எல்லா வகையான கேரக்டர்களையும் செய்யணும். இயக்குநர்கள் சிந்தனையில் பிறக்கும் கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன்!” என்று சொன்னார். அது நிஜம் தான். இயக்குநர்களிடம் தன்னை நம்பி ஒப்படைத்துவிடுபவர் அவர். ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தங்கலான்’ ‘துருவ நட்சத்திரம்’ என ஒவ்வொரு படத்திற்கும் அவரது உழைப்பு திரையிலும் தெரிந்திருக்கும். ‘தங்கலான்’ படத்துக்கு பிறகு ஒரு பக்கா கமர்ஷியலும், எமோஷனலும் கலந்த கதையை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான் அருண்குமார் வீர தீர சூரனைக் கொண்டு வந்தார். அதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும்போதே, அடுத்து நடிக்கும் படத்திற்கான கதையை கேட்க ஆரம்பித்து விட்டார் விக்ரம். தெலுங்கில் ஹிட்களை கொடுத்த இளம் இயக்குநர்கள், பார்க்கிங், போர்த்தொழில் உள்பட பல இளம் இயக்குநர்களிடம் கதைகளை கேட்டு வந்தார். தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரமும் ஒரு ஒன் லைனைச் சொல்லியிருக்கிறார்.