ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துவரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மெல்போர்னில் நடைபெற்றது. அங்கே டேவிட் வார்னர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளை சட்டை, பேன்ட் அணிந்து கொண்டு, ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வரும் டேவிட் வார்னர் ஒரு கையில் லாலி பப்பும், மறு கையில் தங்க நிற துப்பாக்கியுடனும், மாஸாக என்ட்ரி கொடுத்திருப்பதாகவும், சிறப்பு தோற்றத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.