‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை வென்றவர் சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்தின் சவுண்ட் குறித்த விமர்சனங்களில் ஆதங்கமாகி, தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது..
“என்னுடைய ரீ-ரிக்கார்டிங் மிக்ஸிங் நண்பர் ஒருவர் எனக்கு இந்தப் பதிவை அனுப்பினார். இது போன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. எங்கள் கலைத்திறன் இது போன்ற வேலைகளில் சிக்கிக் கொள்வது யார் குற்றம்? ஒலி பொறியாளரின் குற்றமா? கடைசி நேரத்தில் பதற்றத்தில் கூடுதல் விஷயங்களைச் சேர்க்க சொல்பவர்களின் குற்றமா? ஒலி கலைஞர்கள் நாம் இப்போது இதைப் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். படம் பார்க்க வருபவர்கள் தலை வலியுடன் திரும்பச் சென்றால், எப்படி அவர்களுக்கு மீண்டும் மீண்உம் அப்படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும்? ரிப்பீட் வேல்யூ இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவரிடம் பேசினால், ஆதங்கத்துடன் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். ”முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். இந்தியா டுடேயில் ஒரு படத்தின் சவுண்ட் குறித்த பதிவைக் கண்டதும் வருத்தமானது. அதனால்தான் எனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டேன். இது ‘கங்குவா’விற்கு எதிரான பதிவோ, அல்லது சூர்யா சாருக்கோ அல்லது சிவா சாருக்கோ எதிராகவோ பதிவிடவில்லை.
இந்தியாவில் சவுண்ட்டை பொறுத்தவரையில் திரைப்படங்களில் முக்கிய பங்கு பகிக்கிறது. நம்ம மண், கலாசாரம் போன்றவற்றில் சப்தம் எங்கும் தெய்வீகமாகப் பரவியிருக்கிறது. ஒரு படத்தின் சவுண்ட் என்பது அந்த படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லா விதமான ஆடியன்ஸும்தான் தியேட்டர்களுக்கு வருவார்கள். சிலர் தலைவலியோடு வருவார்கள் அல்லது மைக்ரைன் பிரச்னையோடு உள்ளவர்களும் வந்திருப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக திரையரங்கிற்கு வருவார்கள். ஒரு படத்தின் சவுண்ட் மிக்ஸிங் சரியில்லை என்றால், தலைவலி கூடிவிடும். ஆடியன்ஸ் எரிச்சல் ஆகிவிடுவார்கள். இந்த மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தில், வசூலும் பெரிய அளவில் வரவேண்டுமென்றால் ரிப்பீட் ஆடியன்ஸின் பங்கும் முக்கியமாகும். இரைச்சலான சவுண்ட் இருந்தால், ரீப்பீட் வேல்யூ போய்விடும். அதனால சவுண்ட் விஷயங்களின்போது கூடுதல் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
ஒரு படத்தை பொருத்தவரை ஒளியும் ஒலியும் சேர்ந்து அமைந்தால்தான் ஒரு மகிழ்வான படமாக அமையும். படமாக்கிய விதம் எல்லாம் சரியாக அமைந்து சவுண்ட் மட்டும் சரியில்லை என்று பேச்சு வருவது சினிமாவிற்கே ஆபத்தாகிவிடும். சத்தம் அதிகமாக இருந்தால், மக்கள் ரசிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது தவறானதாகும். இயல்பான சப்தங்களையே மக்கள் ரசிப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்ப விஷயங்கள் புரிகிறது. ‘வி.எஃப்.எக்ஸ். சரியில்லை. கிராபிக்ஸ் சரியில்லை… மிக்ஸிங்கில் இந்த தவறு இருக்கிறது’ என மக்களும் நுண்ணிப்பாகக் கவனித்து சொல்கின்றனர். சவுண்ட் என்ஜீனியரிங்கையும் கூர்ந்து கவனித்து சொல்கின்றனர். ஆகையால், இப்படியான விஷயங்களை அதிக அக்கறையுடன் பார்ப்பது அவசியம்னு நினைக்கறேன். ஃபேஸ்புக்கில் என்னுடைய பதிவிற்கு சவுண்ட் கம்யூனிட்டியில் உள்ள பலரும் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர். நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சாதாரண மக்களும் சவுண்ட் குறித்து பேசியதால், ஒரு சவுண்ட் என்ஜீனியராக வருத்தமாகிடுச்சு. அதனால் தான் இப்படி ஒரு பதிவிட்டேன்” என்கிறார் ரசூல் பூக்குட்டி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX