என்ன தான் அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைத்திவிட்டது என்று சொல்லிக்கொண்டாலும் கூட, இன்னும் பலருக்கும் இன்டர்நெட் வேகம் போதுமானதாக இல்லை என்ற மனப்பான்மையே இங்கே நிலவுகிறது. உலகத்தில் இப்பொழுது இணையச் சேவை இல்லை என்றால் பூமியே இயங்காதது போன்று மனிதர்கள் கிறுக்குப் பிடித்துப்போவார்கள். இன்டர்நெட் வேகத்தைப் பல மடங்கு அதிகரிக்க ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதிவேக இன்டர்நெட் வசதி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அதிவேக இன்டர்நெட் வசதியை வழங்குவதற்காக புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறைப்படி, இன்டர்நெட்டின் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் 1000 எச்.டி திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யக்கூடிய டவுன்லோட்டிங் வேகத்தை வழங்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்ப பதிவிறக்க வேகம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் மாற மாற வேகம் அதிகரிக்கும் இன்டர்நெட்

முதலில் உலக பயன்பாட்டிற்கு 2ஜி வந்தது, அதனைத் தொடர்ந்து வேகமான இன்டர்நெட் சேவை என்ற பெயரில் 3ஜி அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது தடையில்லா வேகமான இன்டர்நெட் சேவைக்கு அனைவரும் 4ஜி சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் இப்பொழுதே 5ஜி சேவை துவங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் வேகம் என்ன தெரியுமா?

இன்டர்நெட் சேவை, தலைமுறை தலைமுறையாக இன்னும் அதிக வேகத்தை நோக்கி நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தற்பொழுது ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ள முறையின் படி, 1000 எச்.டி திரைப்படங்களை டவுன்லோட் செய்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர். சரியாகச் சொன்னால், அதாவது ஒரு விநாடிக்கு 44.2 டெராபிட் என்ற வகையில் இந்த இன்டர்நெட்டின் வேகம் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சி

மோனாஷ் ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிவேக இன்டர்நெட்டை கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடி சிப்பில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்தப்படும், ஆனால் இவர்கள் அதைச் செய்யாமல் புதிய முறையை உருவாக்கியுள்ளனர். லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்ற புதிய சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

மைக்ரோ காம்ப் சாதனம்

மைக்ரோ காம்ப் என்ற புதிய சாதனத்தைப் பயன்படுத்தி இந்த அதிவேக இன்டர்நெர் சேவையை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். நினைத்துப் பார்த்திடாத அதிவேக இன்டர்நெட் சேவைக்கான வழியை இந்த மைக்ரோ காம்ப் சாதனம் சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளனர். இனி வரும் காலங்களில் உலகம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் சேவைக்கு இந்த மைக்ரோ காம்ப்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply