அனைவரும் வீட்டில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகளை செய்ய தயாராகிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமான கொழுக்கட்டையை செய்ய விரும்பினால், இக்கட்டுரை உங்களுக்கானது. பொதுவாக கொழுக்கட்டையிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தால் உள்ளே வைக்கும் பூர்ணமாகத் தான் இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் கொழுக்கட்டையோ வித்தியாசமானது. அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடியது. நிச்சயம் இதுநாள் வரை இப்படிப்பட்ட கொழுக்கட்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்க நினைத்தால், இந்த வாழைப்பழ கொழுக்கட்டையை செய்து படையுங்கள்.

சரி, வாருங்கள் இப்போது அந்த வாழைப்பழ கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

* இடியாப்ப மாவு – 1 கப்

* கனிந்த வாழைப்பழம் – 1

* சர்க்கரை – 1/2 கப்

* தண்ணீர் – 3/4 கப்

* ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன்

* நெய் – தேவையான அளவு

செய்முறை:

* ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதுவும் மாவு நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* பிறகு மாவை நன்கு குளிர வைக்க வேண்டும்.

* அடுத்ததாக குளிர வைத்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி நன்கு சூடான பின் இட்லி தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி!

Related Searches :