தூதுவளை, கொடியாகப் படர்ந்து வளரக்கூடியது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூதுவளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.

சித்தர் பாடல்

காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம்

ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம்

மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர்

தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.

                               (பதார்த்த குணசிந்தாமணி)

பொருள்

தூதுவளையை உணவாகக் கொண்டால், காது மந்தம், காசநோய்கள், தோல் நோய்கள், வயிற்று வலி போன்ற நோய்கள் தீரும்.

தூதுவளையின் தன்மை

வெப்பம் உண்டாக்கி – Stimulant

கோழை அகற்றி – Expectorant

உரமாக்கி – Tonic

தூதுவளையின் மருத்துவப் பயன்கள்

தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி, ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.

தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாக பசி எடுக்கும்.

தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

தூதுவளைக் கீரையைப் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகும்.

100 கிராம்  தூதுவளைக் கீரையில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து – 84.7 கிராம்

புரதம் – 3.9 கிராம்

கொழுப்பு – 0.7 கிராம்

தாதுஉப்புகள் – 3.8 கிராம்

நார்ச்சத்து – 2.3 கிராம்

சர்க்கரைச்சத்து – 4.6 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 334 மி.கி

பாஸ்பரஸ் – 52 மி.கி

இரும்பு – 5.0 மி.கி.

கலோரித்திறன் : 40 கலோரி.