சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும் என்று வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.
‘கோட்’ படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, “சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கிவிடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை. இப்படத்தின் பணிகள் தீவிரமாகும் போது மட்டுமே இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
மேலும், ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதனை முடித்துவிட்டு வெங்கட்பிரபு படத்தினை தொடங்கவுள்ளாரா அல்லது இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.